சிகரம் பேசுகிறது

சிகரம் பேசுகிறது, வி.கிருஷ்ணமூர்த்தி, தங்கத்தாமரை பதிப்பகம், பக்.424, விலை ரூ.300.

கும்பகோணம் அருகிலுள்ள கருவேலி என்னும் கிராமத்தில் பிறந்த நூலாசிரியர், தனது 11 ஆவது வயதில் தாயை இழந்தார். சென்னையில் ஏதேனும் தொழில் தொடங்க வேண்டும் என்று தந்தை சென்றுவிட, தனது மூத்த சகோதரர்களின் அரவணைப்பில் வளர்ந்தார். பள்ளிப் படிப்பை முடித்ததும், பட்டப் படிப்பு படிக்க வசதியில்லாததால், எலெக்ட்ரிகல் என்ஜினிரிங் பட்டயப்படிப்பில் சேர்ந்து பயின்றார். ஆனால் அவரே பின்னாளில் பிஎச்இஎல், மாருதி, ஸெயில் என்னும் ஸ்டீல் அத்தாரிட்டி ஆகிய நிறுவனங்களில் தலைவராகப் பணியாற்றியிருக்கிறார்.

“உற்பத்தித்துறையில் போட்டித்திறனுக்கான தேசிய ஆலோசனைக்குழுவின் (NMCC) தலைவராகப் பொறுப்பேற்று, நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கான ஆலோசனைகளைச் சொல்லியிருக்கிறார்.

கிராமத்தில் பிறந்த ஒருவர் இவ்வளவு உயர்ந்த பதவிகளை வகித்தது, நேரு, இந்திரா காந்தி, ராஜீவ் காந்தி, மன்மோகன் சிங் ஆகிய பிரதமர்களின் நம்பிக்கைக்கு உரியவராக இருந்தது, பொதுத்துறை நிறுவனங்களின் நிர்வாகத்தைச் சீரமைத்து உயர்ந்த நிலைக்குக் கொண்டு சென்றது எப்படி என்பனவற்றை எல்லாம் இந்நூல் விளக்குகிறது.

ஒரு நிறுவனம் என்றால் அந்நிறுவனத்தின் உற்பத்தி முறைகûளைச் சீரமைக்க வேண்டியிருக்கும். உற்பத்தி செய்யும் தொழிலாளர்களின் பல்வேறு கோரிக்கைகளைக் கவனத்தில் எடுத்துக் கொண்டு உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டியிருக்கும்.

மாருதி போன்று புதிய கார் வகைகளை உற்பத்தி செய்ய வேண்டும் என்றால் வெளிநாட்டு நிறுவனங்களுடன் கூட்டு சேர்ந்து செயல்பட வேண்டியிருக்கும். தொழிற்சங்கங்கள் மேற்கொள்ளும் பல்வேறு போராட்டங்களை எதிர்கொள்ள வேண்டியிருக்கும். கூடவே, சக மற்றும் மேல் அதிகாரிகளின் பொறாமை, எதிர்ப்புகள் எல்லாவற்றையும் சமாளிக்க வேண்டியிருக்கும்.

நூலாசிரியர் அவற்றை எல்லாம் எப்படிச் சமாளித்துக் கடந்து வந்தார் என்பதைப் பற்றிய அனுபவரீதியான படிப்பினைகள் நூல் முழுவதும் காணக் கிடைக்கின்றன. உலகமய காலத்தில் தனியார் நிறுவனம், பொதுத்துறை நிறுவனம் ஆகியவற்றின் தன்மை எவ்வாறு இருக்க வேண்டும் என்பது விளக்கப்படுகிறது. பொருளாதாரம், நிர்வாகம் ஆகியவற்றில் ஈடுபாடு உள்ள அனைவரின் கைகளிலும் அவசியம் இருக்க வேண்டிய நூல்.

நன்றி: தினமணி, 10/2/20

இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609

இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *