This is a demo store. Any orders placed through this store will not be honored or fulfilled.

+91 93603 01234

You have no items in your shopping cart.

Subtotal: Rs 0.00

Dial for Books

 • கடல் மரங்கள்

  கடல் மரங்கள், மலையாளத்தில் வெள்ளியோடன், தமிழில்: ஆர்.முத்துமணி, முதற்சங்கு பதிப்பகம், பக்.88, விலை ரூ.70.

  ஈழவிடுதலைப் போராட்டத்தில் சிங்களர்களையும், மலாய்க்காரர்களையும் நம்பியிருக்கலாமே? எல்லாரையும் இணைத்துக் கொண்டு போராடியிருக்கலாமே?

  வியட்நாம் எல்லைப்புறப் பகுதியில் உள்ள கு ஆங் ஷி பகுதியைச் சீனா வலுக்கட்டாயமாகத் தன்னுடன் இணைத்துக் கொண்டது. தற்போது சிக்கிமையும், அருணாசல் பிரதேசத்தையும் இணைக்க வேண்டும் என்று கேட்பதைப் போல.

  இஸ்ரேலியர்கள் இஸ்லாமியர்களைக் கொன்று குவிக்கிறார்கள் என்று சொல்கிறார்கள். இஸ்லாமியர்களை அதிக அளவில் கொன்று குவித்தவர்கள் இஸ்லாமியர்கள்தான்.

  இன்னும் இவற்றைப் போல நிறைய அரசியல் விஷயங்கள் இந்நூலில் சொல்லப்படுகின்றன. நவீன காலத்தில் பெண்கள் இன்னும் போகப் பொருளாக இருக்கிறார்கள். வெறும் உடலாகக் காட்சி தருகிறார்கள் என்று இந்நூல் சுட்டிக்காட்டுகிறது. இவற்றை எல்லாம் படித்தவுடன் இந்நூல் தீவிரமான அரசியல் விஷயங்களைப் பேசும் ஒரு கட்டுரை நூல் என்று எண்ணிவிட வேண்டாம்.

  பத்து சிறுகதைகள் அடங்கிய தொகுப்பு இந்நூல். இவற்றை எழுதிய நூலாசிரியரின் அரசியல், வாழ்க்கைப் பார்வைகள் இச்சிறுகதைகளின் மூலம் வெளிப்பட்டிருக்கின்றன. எனினும் சிறுகதைகளுக்குரிய கலைத்தன்மையில் எவ்விதத்திலும் குறைவு இல்லை என்பது வியப்பைத் தருகிறது.

  நூலாசிரியரின் பார்வை எந்த அளவுக்குச் சரியானது என்பதில் கருத்து வேறுபாடுகள் இருக்கலாம். ஆனால், அவருடன் உடன்பாடு இல்லாதவர்களும் கூட ரசித்து வாசிக்கும்படியாக சிறுகதைகள் அமைந்துள்ளன. சாதாரண மனிதர்களின் மன உணர்வுகள், விருப்பங்கள், வேதனைகள், விரக்திகளைச் சொல்லும் சிறுகதைகளும் இத்தொகுப்பில் அடங்கியுள்ளன. அளவில் சிறியதாயினும் இந்நூல் ஏற்படுத்தும் தாக்கம் மிக அதிகம்.

  நன்றி: தினமணி, 12/6/2017.

 • மத்திய கால இந்திய வரலாறு

  மத்திய கால இந்திய வரலாறு, சதீஷ் சந்திரா, வேட்டை எஸ். கண்ணன், பாரதி புத்தகாலயம், விலை 390ரூ.

  பொதுவாக நாம் வரலாறுகளை பின் தொடர்வதே இல்லை. ஆனால், அதுதான் நமக்கு மிகவும் அவசியமானது. இந்தப் புத்தகத்தில் இந்தியாவின் மத்திய கால வரலாறு விலாவாரியாக விவரிக்கப்படுகிறது.

  அவர்களின் கட்டிடக்கலை, வளர்ச்சி, வீழ்ச்சி எல்லாமே தெளிவாக எடுத்துரைக்கப்பட்டிருக்கிறது. சதீஷ் சந்திராவின் பணி அவ்வளவு சிறப்பானது. மக்களுக்கு அணுக்கமாகவும், நெருக்கமாகவும் வாழ்ந்தவர்களின் இடம் சுட்டிக்காட்டப்பட்டிருக்கிறது. தெளிவாக வரலாற்றை பின் தொடர்வதில் சதீஷ் சந்திரா முன்னணியில் நிற்கிறார்.

  தவிக்க விடாமல் அடுத்தடுத்து பரபரக்கிற எளிய மொழி கைவசம் இருக்க, முழு வீச்சில் வேட்டை எஸ். கண்ணன் மொழிபெயர்த்திருக்கிறார். அதனால் புத்தகத்தின் உள் நுழைவு எளிதாகிறது. பேரரசர்கள், குறுநில மன்னர்கள், அவர்களின் வினோதங்கள், மனோபாவம், சீர்திருத்தங்கள் எல்லாமே 480 பக்கங்களில் பரவிக் கிடக்கிறது.

  நூல் மொத்தமும் இருக்கிற சம்பவங்களில் வாழ்வியல் சித்திரங்கள் பளிச்சிடுகின்றன. எப்போதுமே முன்னோர்களின் சரித்திரம் வசீகரமானது என்பதன் சான்றே இந்தப் புத்தகம். இவ்வகை புத்தகங்கள் ஆவணப் பதிப்பாக மாறிவிடக்கூடிய அபாயம் நிகழ்ந்திருக்கிறது. நல்லவேளையாக அப்படி நிகழவில்லை.

  நன்றி: குங்குமம், 26/5/2017.

 • பயாஸ்கோப்

  பயாஸ்கோப், கிருஷ்ணன் வெங்கடாசலம், சந்தியா பதிப்பகம், விலை 275ரூ.

  தமிழர்களின் வாழ்வைப் பொறுத்தவரை சினிமா முக்கியப்பகுதி. தான் விரும்பிய தமிழகமும் விரும்பிய 50 திரைப்படங்களின் சுவாரஸ்ய தகவல்களை தொகுத்திருக்கிறார் கிருஷ்ணன் வெங்கடாசலம்.

  ‘சகுந்தலை’யில் ஆரம்பித்து ‘களத்தூர் கண்ணம்மா’ வரை விசாரணையும், பயணமுமாக போகிறார். அந்தந்த சினிமாவின் சிறு குறிப்பு, கதை, படம் தொடர்பான செய்தி, சுவாரஸ்யம் என நிரவி பரந்திருக்கிறது இந்தப் புத்தகம். எண்ணற்ற தகவல்கள். சினிமாவிற்கு வெளியே இருந்து கொண்டு இவ்வளவு தகவல்களைத் தொகுத்தளித்தது பெரிய சாதனை. இப்படங்களின் ஊடாகச் சென்று சந்தோஷப்பட்டவர்களுக்கும், இவை எதுவொன்றும் அறியாத புதிய தலைமுறைக்கும் சேர்ந்தே உபயோகமாகும் நூல். ‘ஹரிதாஸ், ஸ்ரீவள்ளி, வாழ்க்கை, மாயாபாஜார்’.... என வரிசையாக சுவாரஸ்யங்களை தெளித்துத் தருகிறார்.

  வெகு சரளமாகக் கொண்டு சேர்க்கும் நடை. இதில் எல்லா ரசிகர்களுக்கும் வேண்டிய இடமும் உத்தரவாதமாக இருக்கிறது. நமக்குப் பிடித்த திரைப்படங்கள் பற்றிய விவரமான குறிப்புப் புத்தகம்.

  நன்றி: குமுதம், 24/5/2017.

 • பெண்ணுக்கென்ன கொடுமை

  பெண்ணுக்கென்ன கொடுமை, இதழாளர் அய்கோ, தனு பதிப்பகம், பக்.112, விலை 90ரூ.

  மத்திய வர்க்கத்தைச் சேர்ந்த நவீன காலப் பெண்களுக்கு இழைக்கப்படும் கொடுமைகள் பற்றியு புதிய கண்ணோட்டத்தை இந்நூல் தருகிறது.

  அதாவது ஒரு மடங்கு பெண்ணுரிமை கிடைத்தால், இருமடங்கு பெண் கொடுமை நடக்கிறது என்பதை துணிவுடன் வெளிக்காட்டும் நூல். பெண்ணுரிமைத் தளத்தில் இயங்கும் இருபாலருக்கும் இந்நூல் தேவை.

  நன்றி: குமுதம், 24/5/2017.

 • திருக்குர்ஆனில் அறிவியல் கூறுகள்

  திருக்குர்ஆனில் அறிவியல் கூறுகள், ஹாஜியா டாக்டர் ஆ.ப.ஜெ.மு. நசீமா மரைக்காயர், நந்தினி பதிப்பகம், பக். 328, விலை 240ரூ.

  நூலாசிரியரின் முனைவர் பட்ட ஆய்வேடு நூலாக வந்துள்ளது. இஸ்லாமிய மெய்யியல், திருக்குர் ஆனின் அறிவியல் சார்ந்த கருத்துக்களையும் சிந்தனைகளையும் உள்ளடக்கியிருப்பதை இந்நூல் எடுத்துக் காட்டுகிறது.

  திருக்குர்ஆன் தோற்றம், அறிவியல் பொருள் விளக்கம், ஆழமான ஆய்வாக உள்ளது. சமயத் திருமறைகளை விஞ்ஞான மனநிலையில் நின்று ஆராய்ந்துள்ளார்.

  நன்றி: குமுதம், 24/5/2017.

 • jk ஜெயகாந்தன் வாதம் பிரதிவாதம்

  jk ஜெயகாந்தன் வாதம் பிரதிவாதம், தொகுப்பு ஜெ.ஜெயசிம்ஹன், கலைஞன் பதிப்பகம், பக். 225, விலை 215ரூ.

  சுதந்திரத்திற்குப் பின் தன் படைப்புகளால் அதிகம் பேசப்பட்டவர் எழுத்தாளர் ஜெயகாந்தன். “நான் நானாக உருவானவன்” என்ற பிரகடனத்துடன்தான் அவரது எழுத்துக்கள் பலரின் மனதைத் தட்டியது.

  அரசியல், சமூகம், சினிமா, அறிவியல் என்று பல்வேறு துறைகளிலும் அவரது எழுத்துக்கள் ஆட்சி செய்தன என்ற போதும் எந்த இயக்கத்திற்கும் கட்டுப்படாமல் சுதந்திரப் பறவையாய், தன்னையே ஒரு இயக்கமாகக் கொண்டவர் ஜெயகாந்தன்.

  இவற்றையெல்லாம் உள்ளடக்கிய அவரது வெளிவராத கட்டுரைகள் பலவற்றை அவரது மகனார் ஜெயசிம்ஹன் தொகுத்துத் தந்திருப்பது சிறப்பு.

  நன்றி: குமுதம், 24/5/2017.

 • உணவே மருந்து

  உணவே மருந்து, சீத்தலைச் சாத்தன், ஒப்பில்லாள் பதிப்பகம், பக். 172, விலை 125ரூ.

  இந்நூலாசிரியர் வங்கி மேலாளராக இருந்து ஓய்வுபெற்றவர். இவர் சித்த வைத்தியராக இல்லாவிட்டாலும், சித்த மருத்துவம் குறித்த பழைய ஓலைச் சுவடிகளைத் தேடிப் பிடித்து, அவற்றிலிருந்து - அதுவும் நாம் அன்றாடம் பயன்படுத்தும் உணவுப் பொருட்களில் உள்ள மருத்துவ விஷயங்களைத் தொகுத்து, எளிய தமிழ்நடையில் இந்நூலில் எழுதியுள்ளார்.

  குறிப்பாக, நாம் உட்கொள்ளும் உணவுப் பொருட்களில் உள்ள மருத்துவக் குணங்களை அறிந்துகொண்டு, அவற்றை நம் உடல்நிலைக்கும், சுகாதாரத்திற்கும் ஏற்ப முறையாக எடுத்துக் கொண்டால் ஆயுளையும், ஆரோக்கியத்தையும் நிறைவாகப் பேணலாம்.

  அந்த அடிப்படையிலேயே இந்நூலை உருவாக்கியுள்ளார் ஆசிரியர். இந்நூலில் மங்கலப் பொருட்கள், மளிகைப் பொருட்கள், வாசனைப் பொருட்கள், காய்கறிகள் - கீரைகள், விதைகள், கனிவர்க்கம், மூலிகைகள், மொட்டுகள் - மலர்கள், மரங்கள், பொதுக்குறிப்புகள்... என்று 10-க்கும் மேற்பட்ட தலைப்புகளில் விபரங்களை தொகுத்துள்ளார்.

  இதில் மங்கலப் பொருட்கள் என்றால் உப்பு, மஞ்சள், சந்தனம், எலுமிச்சை, வெற்றிலை, மல்லிகைப் பூ... போன்ற பொருட்கள் உள்ளன. இதில் ஒவ்வொன்றின் மருத்துவக் குணங்களையும் அவற்றைப் பயன்படுத்துவதால் கிடைக்கும் ஆரோக்கியத்தையும், அவற்றை அதிகம் பயன்படுத்தினால் ஏற்படும் கெடுதிகளையும் குறிப்பிட்டுக் காட்டுகிறார்.

  இப்படி இந்நூலில் ஒவ்வொரு தலைப்பிலும் உள்ள பொருட்களின் தன்மைகளை விளக்கியுள்ளார். இன்றுவரை நாம் இவற்றின் அருமை பெருமைகளை அறியாமல் இருந்து விட்டோமே என்பதை, இந்நூலைப் படிக்கும்போது உணர முடிகிறது.

  -பரக்கத்.

  நன்றி: துக்ளக், 7/6/2017.

 • பாலி முதல் மியான் வரை

  பாலி முதல் மியான் வரை, மாத்தளை சோமு, தமிழ்க்குரல் பதிப்பகம், பக். 320, விலை 250ரூ.

  பயணக்கட்டுரைகளில் இந்நூல் சற்று வேறுபட்டது. பாலி, கம்போடியா, தாய்லாந்து, லாவோஸ், பர்மா ஆகிய நாடுகளில் பயணம் செய்து, அங்கு புலம் பெயர்ந்த தமிழின் தொன்மங்களையும் தமிழரையும் கண்டு, அவை தந்த அனுபவங்களையும், செய்திகளையும் நம்மோடு பகிர்ந்து கொள்ளும் பாணி சிறப்பானதாகும்.

  நன்றி: குமுதம், 24/5/2017.

 • அறியாமையிலிருந்து களங்கமின்மைக்கு

  அறியாமையிலிருந்து களங்கமின்மைக்கு, ஓஷோ, தமிழில் சுவாமி சியாமானந்த், கண்ணதாசன் பதிப்பகம், பக். 336, விலை 200ரூ.

  அமெரிக்காவில் ஓஷோ தனது சீடர்களுடன் இருந்த வாழ்க்கை, அரசியல்வாதிகளை நடுங்க வைத்த அவரது உரை, மக்களை மாற்றிய அவரது சிந்தனைகள், அவரை எதிர்த்த அரசியல்வாதிகளுக்கு தனது சொற்பொழிவுகளில் பதில் அடி கொடுத்து, அதற்கான கேள்விகள், பதில்கள் என்று ஓஷோவிற்கே உரிய கடுமையான அதே சமயம் நகைச்சுவையான பேச்சினை உள்ளடக்கியது இந்நூல்.

  நன்றி: குமுதம், 24/5/2017.

 • என்னைப் பிரமிக்க வைத்த பிரபலங்கள்

  என்னைப் பிரமிக்க வைத்த பிரபலங்கள், இயக்குநர் பேரரசு, கற்பகம் புத்தகாலயம், பக்.160, விலை ரூ.110.

  கவிஞர் வைரமுத்து எழுதிய ‘;இந்தக் குளத்தில் கல்லெறிந்தவர்கள்39’ நூலை நினைவூட்டி, நம் கண்களை ஈரமாக்குகிறது இயக்குநர் பேரரசு எழுதியிருக்கும் இந்த நூல். நாட்டரசன் கோட்டையில் பிறந்த பேரரசுவுக்கு, சினிமாவில் உதவி இயக்குநராக வேண்டும் என்று ஆசை. அவரின் தந்தை கூறுகிறார்:

  ‘ஓராண்டு காலம் முயற்சி செய். வாய்ப்பு கிடைக்காவிட்டால் திரும்பி வந்துவிடு, வெளிநாட்டு வேலைக்கு அனுப்ப பாஸ்போர்ட் எடுத்து வைச்சிருக்கேன 39;39’ என்கிறார்.

  இப்படியொரு நிபந்தனையோடு சென்னைக்கு வந்த பேரரசு, ராம.நாராயணனிடம் உதவி இயக்குநராக எப்படிச் சேர்ந்தார் என்பது விறுவிறுப்பான சிறுகதைபோல விவரிக்கப்படுகிறது. ‘ஆடிவெள்ளி 39’ படத்தில் குரங்கு சீறும் காட்சியைப் படமெடுக்க புரொடக்ஷன் அசிஸ்டென்டை நிறுத்தி வைத்த ராம.நாராயணனின் யுக்தி பாராட்டுக்குரியது. தயாரிப்பாளர் ஆர்.பி.சௌத்ரி திரைக்கதையின் மேல் வைக்கும் நம்பிக்கை, கவிஞர் வாலிக்கு இசையமைப்பாளர் பாடல் எழுதக் கொடுத்த மெட்டுக்கு, தான் பாட்டெழுத பேரரசு பெற்ற பயிற்சிகள், பேரரசு பெற்ற வெற்றிகள், மணிரத்னம் தயாரித்த படத்துக்கு வசனம் எழுதக் கிடைத்த வாய்ப்பும், அதற்கு மனோபாலா சொன்ன நன்றியும், கே.பாலசந்தர் தயாரிப்பில் படம் இயக்கும்போது அவரிடம் கதை சொல்லத் தயங்கியதும், வைரமுத்துவைப் பேட்டி எடுத்ததும், கிரகப் பிரவேசத்திற்கு வந்த பாரதிராஜா நெகிழ்ச்சி அடைந்ததும், நடிகர் ராஜேஷ் கட்டிய சமாதியும் அதற்கு அவர் கூறிய விளக்கமும் என ஒவ்வொரு பிரபலத்தின் பலத்தினையும் மெய்சிலிர்க்கும் எழுத்துக்களால் வடித்திருக்கிறார் நூலாசிரியர்.

  மொத்தத்தில் 27 கட்டுரைகள் கொண்ட இந்த நூல் ஒரு நல்ல நாவல் வாசித்த அனுபவத்தைத் தருகிறது.

  நன்றி: தினமணி, 12/6/2017.

Items 1 to 10 of 4463 total

Page:
 1. 1
 2. 2
 3. 3
 4. 4
 5. 5
 6. ...
 7. 447