Dial for books
February 15th, 2012

கலாநிதிமாறன் – கிழக்கு பதிப்பகம் வெளியீடு

kalanithi maaran

Rs. 85
Dial For Books – 94459 01234 | 9445 97 97 97

 

கிழக்கு பதிப்பகம் வெளியிட்டுவரும் புகழ்பெற்ற மனிதர்கள் பற்றிய புத்தகங்கள் வரிசையில் இப்போது வெளிவந்திருப்பது “கலாநிதி மாறன்” பற்றிய புத்தகம் .

அவரது பிறப்பிலிருந்து துவங்கி, துவக்க மற்றும் உயர்கல்வி வரை, வெளிநாட்டில் படிப்பு, சுற்றங்கள், அரசியல் சூழல், தொழிலில் ஈடுபாடு, தனக்கான களத்தை தேர்ந்தெடுத்தல், அசுர வேக வளர்ச்சி, தவறான கணக்குகள் மற்றும் தற்போதய நிலவரம் வரை அனைத்தையும் 24 தலைப்புகளில் விரிவாக, விளக்கமாக சொல்லியிருக்கிறார் ஆசிரியர்.

முதல் அத்தியாயத்தில் கலாநிதியின் வளர்ச்சி பற்றிய நறுக்கென்ற விளக்கம் அவை நிகழ்ந்த வரிசையிலேயே தரப்பட்டிருகிறது. அந்த அத்தியாயம் ஒரு கேள்வியோடு முடிகிறது. “கலாநிதியின் இமாலய வெற்றிக்கு காரணங்கள் என்ன?” அடுத்தடுத்த பக்கங்களில் அதற்கான விடையை சுவையாகவும் சூடாகவும் தருகிறார் ஆசிரியர்.

மாறன் – மல்லிகா மூத்தமகன், கலைஞர் கருணாநிதியின் பேரன் என்று அரசியல் வாசனையோடு பிறந்து வளர்ந்தாலும் கலாநிதிக்கு அரசியலில் நாட்டமில்லை. அனால் அதை தேவையானபோது எப்படி சரியான முறையில் உபயோகித்துக்கொண்டார் என்பதை ஆசிரியர் நமக்குப் புரிய வைக்கிறார். லயோலாவில் படிக்கும்போது மாணவர் தலைவராகப் போட்டியிட்டு வித்தியாசமான பிரசாரத்தால் வெற்றி, இலங்கை தமிழருக்காக ஊர்வலம், அதில் தடியடி, அதோடு அவரது அரசியல் பங்கேற்பு நிறைவுபெற்றது. வெளிநாட்டிற்கு படிக்கசென்றபோது பகுதி நேர வேலை செய்து சம்பாதித்த பணத்தில் ஊர் சுற்றிப் பார்த்தது என கலாநிதியின் பழைய முகம் நமக்கு அதிசயமாய் இருக்கிறது.

அவரின் முதல் ஊடக தொடர்பு குங்குமம் இதழில் துவங்கியது. பிறகு  நாளிதழ் துவக்கி கையை சுட்டுகொண்டது, லேசர் பிரிண்டர் விற்றது என பல அனுபவங்கள். பிறகு பழைய கல்லுரி நண்பர்களுடன் சேர்ந்து பூமாலை வீடியோ பத்திரிகை துவக்கம். அதிலும் தோல்வி. மற்ற யாராக இருந்தாலும் இதோடு சொந்த தொழில் ஆசையை முட்டை கட்டி வைத்துவிட்டு எதாவது வேலைக்கு போயிருப்பார்கள். அங்கேதான் கலாநிதி வேறுபடுகிறார்.

அவரிடம் இருந்த தொலை நோக்கு பார்வையும், ஜெயிக்க வேண்டும் என்கிற வெறியும் அடுத்தது என்ன என்ன என்று கேட்டுக்கொண்டேயிருக்கும் மனதும் அவரை மெதுவாய் தொலைக்காட்சி பக்கம் இழுத்துச்சென்றது. இதுதான் தனது வழி என்று கலாநிதி முடிவு செய்தார். அதன் பிறகு வளர்ச்சியும் போராட்டமுமே அவரது வாழ்க்கை என்றாகிவிட்டது.

ஜீ டிவியில் ஏற்பட்ட அவமானம் , அதை மறக்காமல் இருந்தது , பின்னர் சரியான சமயத்தில் பழிக்குபழி வாங்கியது என்று கலாநிதியின் இன்னொரு முகத்தையும் ஆசிரியர் நமக்கு காட்டுகிறார். பின்னர் தனியே செயற்கைக்கோள் ஒளிபரப்பின் முலம் சன் டிவி துவக்கம், அதை எல்லா இடங்களிலும் ஒளிபரப்ப SCV துவங்கியது, அதற்கு தனது தம்பி தயாநிதியை தலைவராக்கியது என வேகமெடுக்கிறது அவரது வாழ்க்கை.

சாதாரண பொழுது போக்கு சாதனமாக விளங்கிய டிவியை ஆட்சி மாற்றத்திற்கான அற்புத சக்தியாகவே மாற்றிகாட்டினார் கலாநிதி. ஆட்சியும் அதிகாரமும் கையில் வந்தவுடன் சன்டிவியின் வளர்ச்சி பரபரவென  உச்சியைத் தொட்டது. மக்கள் விரும்பும் தொடர்கள், புதுப்புது திரைப்படங்கள், ஜனரஞ்சக நிகழ்ச்சிகள் என்று அதன் எல்லை விரிவடைந்துகொண்டேபோனது.

போட்டி என்று யாருமில்லை. போடடியாய் யார் வந்தாலும் அவர்களை அழித்துவிட்டுத்தான் மறுவேலை என்ற கலாநிதியின் கொள்கையை விளக்கப் பல நிகழ்வுகளை ஆசிரியர் அடுக்குகிறார். படிக்கும்போதே நமக்கு ஆச்சரியமும், அதிர்ச்சியும் ஒருங்கே ஏற்படுகின்றன.  தம்பியை அதிகாரத்தில் அமர்த்தி, பின் தம்பியுடையான் படைக்கஞ்சான் என்று முன்னேறி தென்னிந்தியா மீடியா மன்னர் என்ற தகுதியை அடைய கலாநிதி மேற்கொண்ட எல்லா முயற்சிகளையும் அருகிலிருந்து பார்ப்பதுபோல்  அழகாக, அழுத்தமாக விளக்குகிறார் ஆசிரியர்.

தெளிவான நடையும், துல்லியமான தகவல்களும், ஒன்றன் பின் ஒன்றாய் வரிசைகட்டி  நிற்கும் நிகழ்வுகளின் தொகுப்பும் நம்மை ஒரே முச்சில் படிக்க வைக்கின்றன. சன் டிவியின் செய்திபிரிவில் ஐந்தாண்டுகள் பணியில் இருந்தவர் என்ற தகுதியால் உண்மைகளை சிதைக்காமல் எழுதியிருக்கிறார்.

இது  ஒரு மிகப்பெரிய மீடியா கம்பெனியை உருவாக்கியவரின்  கதை மட்டுமல்ல. 1990 லிருந்து ஊடக வளர்ச்சி பற்றியும் விரிவாகச் சொல்லும் முயற்சி என்ற வகையிலும் ஆசிரியருக்கு வெற்றிதான். தனது நான்காவது படைப்பாக இதை தந்திருக்கும்  கோமல் அன்பரசனை எவ்வளவு பாராட்டினாலும் தகும். மேலும் பல நல்ல படைப்புக்களை அவரிடமிருந்து எதிர்பார்க்கலாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

* Copy this password:

* Type or paste password here:

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>

Anti-Spam Protection by WP-SpamFree